Wednesday 30 November 2011

நிராகரிப்பு

ஏம்மா தினமும் எனக்கு மாத்திர தர?
எய்ட்ஸ் உனக்கென்று எப்படி சொல்வது
என்னவெனக் கேட்டால் என்னவென்று சொல்வேன்?
காய்ச்சல் வரக்கூடாதுல்ல அதுக்குத்தான்

பாட்டு நல்லா படிச்சா
கன்னத்தில் முத்தம் தரும் பவானி டீச்சர்
நா பாடினா மட்டும்
சிரிப்போடு நிறுத்திக்கிறாங்க ஏம்மா?

என்னோட விளையாட கூடாதுன்னு
கணேஷ் அம்மா சொன்னங்களாம்
தொட்டா நோய் ஒட்டிக்கிடுமோ?

எல்லாரும் ஒன்னா சாப்பிடைல
என்கூட மட்டும் யாரும் இல்ல
என்ன தப்பு நா செஞ்சேன்?

வேணுமுன்னு இழுத்துக்கல
வேண்டாத பயபுள்ள
ரத்தத்தால வந்ததடா
ஊமை கண்ணீர் வடிச்சப்படி
உண்மைய எப்பிடி எடுத்துரைக்க?

பாவி என் வயித்தில் பொறந்ததால
சாபக்கெடு வந்திருச்சு
ஆத்தா காளியாத்தா நீயாவது எடுத்து சொல்லேன்
எங்கள ஒதுக்கவேண்டாமுன்னு

Tuesday 29 November 2011

மற்றுமொரு தருணம்

A for Apple
B for Banana
C for Carrot
என்று கூவி கூவி விற்க
வந்துவிட்டான் வெள்ளைக்காரன்
தக்காளி கூட இனிமேல்
டாலரில் தான் விற்பனை
சில்லரை வணிகத்தில்
அந்நியரின் முதலீடு
அனாதைகளாய் போன இந்தியரை
அடிமையாக்க மற்றுமொரு தருணம்
முதலாளிகளாய் முழுங்கியது போதாதா??
விலைவாசியால் வீதியில் நிற்கும் எங்களை
விரட்ட வேறு வேண்டுமா?
மேல்தட்டு மக்களுக்கே மத்தியரசு என்றால்
நடைப்பாதை வியாபாரிகள் என்ன
நடைப்பிணமாய் அலைவதா??
கிஸ்தி,வரி,வட்டி என வசனம்பேச
வீரபாண்டிய கட்டபொம்மா
நீ தான் வரவேண்டும் போல
ஊமைகள் எங்களை காப்பாற்ற
வெண்புரவி கிடைக்காவிட்டாலும்
வாடகை சைக்கிளாவது வாங்கிக்கொண்டுவா!!
சில்லரை விற்பனையை எதிர்த்து
சின்னதாய் செய்வோம் ஒரு சுதந்திரப்போராட்டம்

Wednesday 23 November 2011

ஆதங்கம்

உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க இடம்
எதுவுமே கிடைக்கவில்லை
என் சாமனியனுக்கு
வறுமைகோட்டிற்குக் கீழ் என பிரித்தாயா?
வாழத்தகுதி இல்லாதவர்கள் என பிரித்தாயா?
கஜானா காலியாமே? என்று
காய்ந்த வயிரோடு சொல்லும் என் மக்கள்
தேர்தலுக்கு செலவிட்ட பணத்தை
கஜானாவில் சேர்த்துவைத்திருந்தால்
பக்கத்து நாட்டுக்கு வட்டிக்கு குடுத்திருக்கலாம்

தங்கத்தின் விலையறிந்து
முதிர்கன்னி என்னை
கிழவனுக்கு மணமுடித்தார்
வற்றிப்போன மார்போடு இருக்கும் எனக்கு
தாய்ப்பால் ஏது?
ஆவின் பாலுக்குக்கூட வக்கில்லை என் குழந்தைக்கு
கணவனை இழந்தேன் கைம்பெண் ஆனேன்
அத்தியாவசிய பொருட்கள் கூட
என்னை விற்றால் தான் கிடைக்கும் போல
விலைவாசி உயர்வால்
விலைமகளாய் போவேனோ?
அரசு பள்ளியில்
சமச்சீர் கல்வியாவது கிடைக்கட்டுமென
ஓடி ஓடி உழைத்தேன்
பேருந்தில் செல்ல வலி இல்லாமல்

ஏழைகள் எங்களை நாடு கடத்திவிடு
அகதிகளாய் அயல் நாட்டில் பிச்சையெடுக்கிறோம்- இல்லயேல்
இலவசமாய் எலிமருந்தயும் சேர்த்து கொடு
விலைவாசி பற்றி பயந்தே சாகாமல் இருக்க

Thursday 17 November 2011

இரும்பால் ஆன இதயத்தை
காந்த கண்ணாலல்லவா திறக்கிறான்!!
திறந்தால் தெரிந்து விடுமே
உள்ளே இருப்பது அவனென்று
அவனால் முடியவிட்டாலும்
வெட்கம் கெட்ட மனது
கள்ள சாவி குடுக்கிறது

Thursday 10 November 2011

என்னவள்


மீசை இல்லா பாரதி
புத்துயிர் பெற்ற ஜான்சிராணி
கம்யூனிசம் பேசும் என் கல்யாணசுந்தரி
பகுத்தறிவு சொல்லும் பெண் பெரியார்
குற்றம் சொல்ல முடியாத என் குந்தவை
புதுகவிதை எழுதும் என் காதலி
உமைக்காக தவமிருக்கும் சிவனாக நான்
சிங்கம் சிரிக்குமா என்ன??
சிரிக்கிறாயே நீ!!!
விளையாட்டாய் இடை தொட்ட போது
தடயமே இல்லாமல் செத்து போனேன் நான்
முதன்முதலாய் பதித்த முத்தத்தை
ரத்தத்தின் சூடு குறையாமல்
நெஞ்சுகுழியில் நிறைத்து வைத்திருக்கிறேன்
காதல் நோயால் ஊருகி ஓடும் இதயத்துக்கு
மருந்தாக ஒரு மாங்கல்யம்
மனம் கவர்ந்த வந்தியதேவனே
மாலையிடும் மணநாள் எப்போது??

Wednesday 9 November 2011

ரோஜா

நீ மட்டும் அழகாய் இதழ் காட்டி சிரிக்கையில்
உன்னை சுற்றி என் இத்தனை கோரை பற்கள்
நீ மலர் வளையமா?? மலர் செண்டா??
உனக்கே தெரியாது
நாளை உதிர போகும் நீ கூட சிரிக்கிறாய்
மனிதயந்திரங்கள் சிரிக்க மறுக்கின்றன
நீ விட்டு போன பின்பும்
தாடி வளர்த்தேன்
கன்னத்தில் பதித்த முத்தம்
காற்றில் கரைந்துவிட கூடாது என்பதற்காக