Monday 19 December 2011

மயங்குகிறேன்


உச்சி வகிட்டில் நெற்றி குங்குமம் வைத்தபின் தான்
முதல் முத்தம் பதிப்பதென முடிவோடிருக்கிறேன்
கள்ளவிழியால் கட்டியிலுத்தால்
கட்டாயமாய் மாற்றிவிடுவேன் குறிக்கோளை
தேநீர் கூட அதிகம் அருந்தாதவன் நான்
கண்ணுக்குள் கள்ளையூற்றி
முழுநேர குடிகாரனாக்கிவிட்டாய்

உதட்டைச் சுழித்தாலே உருக்குலைகிறேன் நான்
வாய்விட்டு சிரித்தால் விழுங்கிவிடுவேன் உன்னை
கல்யாணத் தேதி சொல்லும்வரை காணதே - என
கண்ணுக்கு கட்டளையிட்டால்
சத்தியத்துக்கு சாட்சியாய்
உன்னையல்லவா தேடுகிறது

தங்கையின் திருமணத்திற்கு
வரச்சொல்லி அழைப்புவைத்தேன்
வீட்டில் எல்லாரும் யாரெனக் கேட்டால்
வீட்டுக்காரி எனச் சொல்லவா?
கண்ணசைவால் ஒத்துக்கொள்
கட்டிவிடுக்கிறேன் தாலியை
ஒற்றை மேடையில் இரட்டை கல்யாணம்

Thursday 15 December 2011

மறுஜென்மம்

College tour போகவேணும் ஆயர்ரூபா(1000rs) தாயேன்
உங்க அப்பா எங்கிட்ட குடுத்து வச்சிருகாரு பாரு!
Pocket money நூறுரூபா தாயேன்
வட்டிக்குத்தான் வாங்கிட்டு வரணும்

சரி ஒரு முத்தமாச்சும் கடனா தாயேன்
சிரித்தால் அம்மா!!
அப்பாவிடம் வட்டியும் முதலுமா வாங்கித்தரேன்
போடா போக்கிரி என்று சொல்லிக்கொண்டே கொடுத்தால் ஆயிரத்திநூறாக(1100)

நரையவிழுந்தும் இளமையாக
மலடியென்றறிந்தும் மனைவியாக
தத்தெடுத்து முத்து கொடுத்த தந்தையாக
என்றும் என்னுயிர் காதலாக

புது சேலை கட்டி வந்தால்
புள்ளை பெத்துக்க வக்கில்லை - என்று
ஊர் வாயில் உலையாக
உருகி நின்றேன் சிலையாக

விரதம் எதையும் விடவே இல்ல
வேண்டுதலும் பலிக்கவில்ல
மருத்துவமனையில் பலியா கிடந்தும்
வயிறு மட்டும் நிரம்பவில்ல

மனைவி நான் இருந்ததனால்
மறுமணம் செய்ய மறுத்தாயோ?- இல்லை
மாறாகாதலுடன் உன்
மனக்கவலை மறைத்தாயோ?
மறுஜென்மம் என்றொன்றிருந்தால்
உன்னையே மணந்திடுவேன்
ஒரு குழந்தை பெற்றிடுவேன்
ஒன்றோடு நில்லாமல் இன்னொன்று தத்தெடுப்பேன்

Tuesday 13 December 2011

காதல் மொழி


சிரிச்சுகிட்டே பறக்கும்போது
பறவையென நினைத்தேன் பெண்ணே! - ஆனால்
என்னிடம் இருப்பது மனம் தான் மரமல்ல
மரங்கொத்தி பறவையாய் நீ இருக்க

உழைத்து உழைத்து உயர்ந்தவன் நான்
உன்னை கண்டாலே உருகுகிறேன்
குழந்தை என நீ சிரித்தால்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை இழக்கிறேன்

பல நாடு சென்றவன் தான்
பல மொழிகள் கற்றவன் தான்
காதல் மொழி பேச மட்டும்
வார்த்தை தேடி தட்டழிகிறேன்

சண்டியனாய் திரிந்தவனடி
இன்று சமாதானம் பேசுகிறேன்
கயல் விழிகளை முடிக்கொள்
கண்டிப்பாய் சொல்லிவிடுவேன் காதலை!!

Monday 12 December 2011

அணை (அ) ஆணை

இடுக்கி தேர்தலில் நீ வெற்றிபெற
தமிழகத்தை தரிசாக்கி
பரிசு கொடுக்க வேண்டுமா???

உன் மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கொடுக்க
உம்மன் சாண்டி கொள்கைக்கு நாங்கள் ஒத்துகொள்ளவேண்டுமா?

குழி தோண்டி அணை கட்டிவிட்டால்
எங்கள் மண் மலடாகி விடாதா?

வந்தவர்களை வாழவைப்பது சரிதான் - அதற்காக
நாமின்னும் இளிச்சவாயர்களாய் இருக்க வேண்டுமா?

தாய் மண்ணை காப்போம் என படத்துக்கு படம்
வீர வசனம் பேசிய ஒருவர்கூட
வாய் திறக்கவில்லயே!!

அணைக்காக தமிழக எல்லையில்
அடி பட்டு சாவது
அயல் நாட்டினன் இல்லையட - நம்
அண்ணன் தம்பிகள்..

அணை கட்டியவனின் வாரிசு
அமெரிக்காவில் இருக்கிறதாம்
மெயில் அனுப்பினராம் - வந்து
உயிலயா மாத்தி எழுதப்போகிறான்?

மாநகரத்து மாமணிகளே
இன்று பேப்பர் படித்து அநியாயத்தை மறந்துவிட்டால்
நாளை சோற்றுக்கு பக்கத்து மாநிலத்திடம்
பிச்சை தான் எடுக்கவேண்டும்

மத்தியரசு ஊழலை மட்டும் அல்ல
உணவு பிரச்சனையையும் மதிக்காது
ஒன்றாய் குரல் கொடுப்போம்
உரிமைக்காக நாம் மரிப்போம்

Sunday 11 December 2011

பெண்ணே!!

கற்பு என்றால்
கண்ணகி என்றாய்
உன் பெயர் இல்லையா?
அந்த பட்டியலில்!

உற்றுஉற்று பார்க்கிறான் - என்று
உண்மைதனை மறைத்தாயே!
மனசாட்சியை கேட்டுப்பார்
அவனை உறுத்துவது யார் எனச் சொல்லும்

பெண்களுக்கு எதிரியல்ல - நானும்
பெண்புலிக்கு பிறந்தவள்தான் - இப்போதும்
பெண்ணியம் தான் பேசுகிறேன்
பெண்மைதனை எடுத்துரைக்க!

அயல்நாடு சென்றிடுவோம்!
அங்குள்ள நாகரீகம் படித்திடுவோம் - என்
பெண்ணல்ல இவளென்று
பெற்றோரே சொல்லும் அளவல்ல!

அனைத்து மொழிகள் கற்றிடுவோம்!
தமிழ் மொழியில் பேசிடுவோம்!
அந்நியனாய் எவனும் வந்தால்
அக்னியால் சுட்டிடுவோம்!

திருமணமும் செய்திடுவோம்!
கணவனயே காதலிப்போம்
ஒரு குழந்தை பெற்றிடுவோம்
பெற்றால் தான் பிள்ளையா? - இன்னொன்று
தத்துக் கூட எடுத்திடுவோம்!

படிப்புடன் பண்பினையும் கொடுத்திடுவோம்!
வீரத்துடன் பகுத்தறிவும் ஊட்டிடுவோம்!
அன்பொன்றே சிறந்ததென
அதன் வழி நடக்க செய்திடுவோம்!

அடுப்படியில் ராஜாங்கம்
அறுசுவையும் சமைத்திடுவோம்!
என் ராஜாத்தி பெண்ணென்று
மறுஅன்னை(மாமியாரை) சொல்ல வைப்போம்!

கூட்டுக்குடும்பம் தனில் வாழ்ந்து
சொந்தங்களோடு சிரித்திடுவோம்!
நிறை குறைகள் எதிலும் உண்டு
அதை நட்போடு சரி செய்வோம்!

சீதை என நீ இருந்தால்
தீக்குளிக்க தேவையில்லை!
முண்டாசு கவி சொன்ன
முறைப்பற்றி வாழ்ந்திடுவோம்!

கணிணி மட்டும் கல்வியென்ற
கருத்துதனை மாற்றிடுவோம்!
விவசாயம் அதில் சேர்ந்து
வருங்காலத்தை பலம் செய்வோம்!

தாய்மை மட்டும் பெண்ணல்ல
தாய்நாட்டிற்கும் வளம் சேர்ப்போம்!
அரசியலில் நுழைந்திடுவோம்
அசிங்கங்களை களைந்திடுவோம்!

ஏழைகளும் மனிதரென
எடுத்துணர செய்திடுவோம்!
எளியவர்க்கு வேலை தந்து
இலவசங்கள் அழித்திடுவோம்!

விண்வெளியும் சென்றிடுவோம் - அங்கும்
விருந்தோம்பல் தனை செய்வோம்!
ஆடவர்க்கு நிகரெனவே
அனைத்தையுமே கற்றிடுவோம்!

காலடித் தடம் பதிக்க
கடல்தாண்டி சென்றிடுவோம்!
விதிவிலக்கும் சிலர் உண்டு - அவர்களை
விடைப்பெறவே செய்திடுவோம்!

சிவனின்றி சக்தியில்லை
எனும் கருத்தில் நாட்டமுண்டு
தோழமையுடன் நீ இருந்தால்
தோல்விக் கூட சீண்டாது!

பெருநிம்மதி எனக்குண்டு
உங்களில் நானும் ஒன்றென்று
பெண்மையினை எடுத்துரைக்க
நல்ல சந்தர்ப்பம் இதுவென்று!

Wednesday 7 December 2011

எம்புள்ள

வெள்ளந்தி மனசுக்குள்ள
வெத நெல்லா உன் நேசம்
இப்போ மேடான வயித்துக்குள்ள
மிதக்குதொரு சிங்கக்குட்டி

சேட்டை பல செஞ்ச போதும்
இறக்கி வைக்க ஆசையில்ல
அவஸ்த பல தந்த போதும்
அலுப்பு கூட தோணவில்ல

நான் மட்டும் அனுபவிச்ச
இன்பமான இம்சையிது
நீ கை வச்சு பார்க்கையிலே
நெளியிறது உன் ஊசுரு

கைவளையல் இசைக்கேட்டு -இன்னொரு
இசைஞானி வருவானோ?
இரட்டையாத்தான் பொறந்திட்டா-மற்றொருத்தன்
கவிக்கூட படிப்பானோ?

இடுப்புவலி பொறுப்பேனா? - என
பயமுண்டு நெஞ்சுக்குள்ள
இருந்தாலும் பரவாயில்ல
கண்மணிய கண்ணெதிரில் காணயில

Tuesday 6 December 2011

என் நேசம்

காதலா??? நானா?? - என்று
பகலெல்லாம் போட்ட வேஷம்
இரவானால் கலையுதய்யா
தலையணையும் நனைகயிலே
தடுமாற செய்யுதய்யா
சட்டம் போட்டு பாதுகாக்க- உம்மனசு
முல்லை பெரியார் அணை இல்ல
பூகம்பம் வந்து நொறுங்கிடுமோன்னு
பயந்து போக தேவையில்ல
தாமிரபரணி தண்ணிகுடிச்சும்
தாகம் இன்னும் தீரவில்ல
தேக்கி வச்ச பாசமின்னும்
திச மாறி போயிடல
மருதாணி வச்ச கையி
சிவக்குமுன்னு தெரியுமய்யா
செவபுக்கு காரணம் தந்த
உன்ன இன்னும் காணவில்ல
மாளிகை புரத்து அம்மன் இல்ல
காலமெல்லாம் காத்திருக்க
மாறாத உன் நேசம் - என்
மதி மயங்க வைக்குதய்யா

Wednesday 30 November 2011

நிராகரிப்பு

ஏம்மா தினமும் எனக்கு மாத்திர தர?
எய்ட்ஸ் உனக்கென்று எப்படி சொல்வது
என்னவெனக் கேட்டால் என்னவென்று சொல்வேன்?
காய்ச்சல் வரக்கூடாதுல்ல அதுக்குத்தான்

பாட்டு நல்லா படிச்சா
கன்னத்தில் முத்தம் தரும் பவானி டீச்சர்
நா பாடினா மட்டும்
சிரிப்போடு நிறுத்திக்கிறாங்க ஏம்மா?

என்னோட விளையாட கூடாதுன்னு
கணேஷ் அம்மா சொன்னங்களாம்
தொட்டா நோய் ஒட்டிக்கிடுமோ?

எல்லாரும் ஒன்னா சாப்பிடைல
என்கூட மட்டும் யாரும் இல்ல
என்ன தப்பு நா செஞ்சேன்?

வேணுமுன்னு இழுத்துக்கல
வேண்டாத பயபுள்ள
ரத்தத்தால வந்ததடா
ஊமை கண்ணீர் வடிச்சப்படி
உண்மைய எப்பிடி எடுத்துரைக்க?

பாவி என் வயித்தில் பொறந்ததால
சாபக்கெடு வந்திருச்சு
ஆத்தா காளியாத்தா நீயாவது எடுத்து சொல்லேன்
எங்கள ஒதுக்கவேண்டாமுன்னு

Tuesday 29 November 2011

மற்றுமொரு தருணம்

A for Apple
B for Banana
C for Carrot
என்று கூவி கூவி விற்க
வந்துவிட்டான் வெள்ளைக்காரன்
தக்காளி கூட இனிமேல்
டாலரில் தான் விற்பனை
சில்லரை வணிகத்தில்
அந்நியரின் முதலீடு
அனாதைகளாய் போன இந்தியரை
அடிமையாக்க மற்றுமொரு தருணம்
முதலாளிகளாய் முழுங்கியது போதாதா??
விலைவாசியால் வீதியில் நிற்கும் எங்களை
விரட்ட வேறு வேண்டுமா?
மேல்தட்டு மக்களுக்கே மத்தியரசு என்றால்
நடைப்பாதை வியாபாரிகள் என்ன
நடைப்பிணமாய் அலைவதா??
கிஸ்தி,வரி,வட்டி என வசனம்பேச
வீரபாண்டிய கட்டபொம்மா
நீ தான் வரவேண்டும் போல
ஊமைகள் எங்களை காப்பாற்ற
வெண்புரவி கிடைக்காவிட்டாலும்
வாடகை சைக்கிளாவது வாங்கிக்கொண்டுவா!!
சில்லரை விற்பனையை எதிர்த்து
சின்னதாய் செய்வோம் ஒரு சுதந்திரப்போராட்டம்

Wednesday 23 November 2011

ஆதங்கம்

உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க இடம்
எதுவுமே கிடைக்கவில்லை
என் சாமனியனுக்கு
வறுமைகோட்டிற்குக் கீழ் என பிரித்தாயா?
வாழத்தகுதி இல்லாதவர்கள் என பிரித்தாயா?
கஜானா காலியாமே? என்று
காய்ந்த வயிரோடு சொல்லும் என் மக்கள்
தேர்தலுக்கு செலவிட்ட பணத்தை
கஜானாவில் சேர்த்துவைத்திருந்தால்
பக்கத்து நாட்டுக்கு வட்டிக்கு குடுத்திருக்கலாம்

தங்கத்தின் விலையறிந்து
முதிர்கன்னி என்னை
கிழவனுக்கு மணமுடித்தார்
வற்றிப்போன மார்போடு இருக்கும் எனக்கு
தாய்ப்பால் ஏது?
ஆவின் பாலுக்குக்கூட வக்கில்லை என் குழந்தைக்கு
கணவனை இழந்தேன் கைம்பெண் ஆனேன்
அத்தியாவசிய பொருட்கள் கூட
என்னை விற்றால் தான் கிடைக்கும் போல
விலைவாசி உயர்வால்
விலைமகளாய் போவேனோ?
அரசு பள்ளியில்
சமச்சீர் கல்வியாவது கிடைக்கட்டுமென
ஓடி ஓடி உழைத்தேன்
பேருந்தில் செல்ல வலி இல்லாமல்

ஏழைகள் எங்களை நாடு கடத்திவிடு
அகதிகளாய் அயல் நாட்டில் பிச்சையெடுக்கிறோம்- இல்லயேல்
இலவசமாய் எலிமருந்தயும் சேர்த்து கொடு
விலைவாசி பற்றி பயந்தே சாகாமல் இருக்க

Thursday 17 November 2011

இரும்பால் ஆன இதயத்தை
காந்த கண்ணாலல்லவா திறக்கிறான்!!
திறந்தால் தெரிந்து விடுமே
உள்ளே இருப்பது அவனென்று
அவனால் முடியவிட்டாலும்
வெட்கம் கெட்ட மனது
கள்ள சாவி குடுக்கிறது

Thursday 10 November 2011

என்னவள்


மீசை இல்லா பாரதி
புத்துயிர் பெற்ற ஜான்சிராணி
கம்யூனிசம் பேசும் என் கல்யாணசுந்தரி
பகுத்தறிவு சொல்லும் பெண் பெரியார்
குற்றம் சொல்ல முடியாத என் குந்தவை
புதுகவிதை எழுதும் என் காதலி
உமைக்காக தவமிருக்கும் சிவனாக நான்
சிங்கம் சிரிக்குமா என்ன??
சிரிக்கிறாயே நீ!!!
விளையாட்டாய் இடை தொட்ட போது
தடயமே இல்லாமல் செத்து போனேன் நான்
முதன்முதலாய் பதித்த முத்தத்தை
ரத்தத்தின் சூடு குறையாமல்
நெஞ்சுகுழியில் நிறைத்து வைத்திருக்கிறேன்
காதல் நோயால் ஊருகி ஓடும் இதயத்துக்கு
மருந்தாக ஒரு மாங்கல்யம்
மனம் கவர்ந்த வந்தியதேவனே
மாலையிடும் மணநாள் எப்போது??

Wednesday 9 November 2011

ரோஜா

நீ மட்டும் அழகாய் இதழ் காட்டி சிரிக்கையில்
உன்னை சுற்றி என் இத்தனை கோரை பற்கள்
நீ மலர் வளையமா?? மலர் செண்டா??
உனக்கே தெரியாது
நாளை உதிர போகும் நீ கூட சிரிக்கிறாய்
மனிதயந்திரங்கள் சிரிக்க மறுக்கின்றன
நீ விட்டு போன பின்பும்
தாடி வளர்த்தேன்
கன்னத்தில் பதித்த முத்தம்
காற்றில் கரைந்துவிட கூடாது என்பதற்காக

Tuesday 18 October 2011

மை


கண்ணிலிடும்போது அவளுக்கு
கன்னத்திலிடும்போது குழந்தைக்கு
விரலிலிடும்போது இந்தியனுக்கு
கருப்பு மை கூட அழகுதான்

நெரிசல்

பேருந்து நெரிசல் கூட
வரமாய் தெரிகிறது
என்னருகில் அவள்