Sunday 5 August 2012

எந்த பக்கம் திரும்பினாலும், அந்த பக்கம் நீ இருக்க

எந்த பக்கம் திரும்பினாலும்
அந்த பக்கம் நீ இருக்க

காலையில எழுந்திரிச்சு
மொகத்த நானும் கழுவிக்கிட்டு
கண்ணாடியில பாத்தாக்கா
கண்ணுக்குள்ள நீ இருக்க

வெட்கங் கெட்ட சிறுக்கிக்கு
விடிஞ்சதின்னும் தெரியலியோ
மத்தியானம் ஆயிருச்சு
மச்சான் நெனப்பின்னும் போகலயோ??

கருவாட்ட திங்கும் போது
உப்பு கரிக்கயில நீ இருக்க
புளிதண்ணி வச்சாலும் - தொட்டுகிட
கானத் தொவயலாவும் நீ இருக்க

அந்தியும் தான் மசங்கிருச்சு
ஆதவனும் மறச்சிருச்சு
அத்தானு கூப்பிடத்தான்
ஆசையும் தான் வந்திருச்சு

கண்ண நானும் தொடச்சிக்கிட்டு
கவிதை எழுத நெனச்சாக்கா
வார்த்தைக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு
கவிதையாத்தான் நீ இருக்க

மொழு மொழுனு எண்ண வச்சு
மொட்டு போல பின்னல் போட்டு
மண மணக்க மல்லி வச்சு
மச்சான தேடிக்கிட்டு வாசல் வர வந்தாச்சு

காட்டுக்கு போனவுக
காலடிச்சத்தம் கேட்டுடுச்சு
இந்தாரு வெள்ள நிலா
கண்ண நீயும் மூடிக்கடே!!

Monday 28 May 2012

காதலினைப் புரிந்தாயோ?

கொஞ்ச நேரப் பிரிவுக்கே
கதி கலங்கி போனேனே
கை பையோடு உன்னையும் தான்
கொண்டுவர நினைச்சேனே
கொண்டவனே உணர்ந்தாயோ? - என்
காதலினைப் புரிந்தாயோ?

உன் கையொடு கைகோர்த்து
கடல்மணலில் நடந்துவர
சிறு மணலும் வெட்கப்பட்டு
கடல் கொண்டு கண்மூட
கொண்டவனே உணர்ந்தாயோ? - என்
காதலினைப் புரிந்தாயோ?

ஆக்ஸிஜனும் நுழையாத
ஊருக்கு நாம் போவோமா?
அடையாளம் தெரியாம
அங்கேயே தொலைவோமா?
கொண்டவனே உணர்ந்தாயோ? - என்
காதலினைப் புரிந்தாயோ?

இதுவரைக்கும் சொல்லாத
புதிய வார்த்தை படிச்சேனே
என்னங்க னு சொல்லி சொல்லி
ஏங்கி ஏங்கி தொலைஞ்சேனே
கொண்டவனே உணர்ந்தாயோ? - என்
காதலினைப் புரிந்தாயோ?

அந்த அழகிய நிமிடங்கள்

பட்டு சீல கட்டிக்கிட்டு - உன்
பக்கத்துல நிக்கயில
ஊரே வந்து நின்னபோதும்
ஒருத்தர் கூட தெரியலியே

கை காலு நடுங்கரத
கண்ணில் யாரும் காணாம
பூச்செண்ட புடிச்சுக்கிட்டேன்
புது வெட்கம் பூசிக்கிட்டேன்

நண்பர் கூட்டம் சேர்ந்துகிட்டு
நையாண்டி செஞ்ச போதும்
தல நிமிர்ந்து பார்க்கலயே
தெளிவா ஏதும் கேக்கலயே

தாலி கட்டும் நேரத்தில
விரல் கொஞ்சம் தீண்டயில
நெஞ்செல்லாம் படபடக்க
கொஞ்சம் அழுகையும் தான் சேர்ந்து வர

நெத்தி பொட்டு வெக்கயில
இதுதான் நமக்கு நேரமுன்னு
தோளோடு சாஞ்சுக்கிட்டேன்
உன் பூ வாசம் தெரிஞ்சுக்கிட்டேன்

உன் விரல் பிடிச்சு சுத்திவர
நீ விஷமங்கள் செய்துவிட
சிரிக்கவும் முடியலியே
சிலிர்க்கவும் முடியலியே

வெள்ளி மெட்டி கொண்டு வந்து
கால் விரல் பிடிச்சு போடயில
எங்கிருந்து வந்திருச்சோ
இனம் தெரியா இளஞ்சூடு

பாலும் பழமும் தந்தவுக
பேசி பேசி என்ன ஏமாத்த
அத கண்டு நீ சிரிக்க
அந்த அழகில் சொக்கி போனேனே

இந்த காதல்

தவிப்பும் தாகமும்
தணியாது இந்த காதலில்

சண்டையும் சமாதானமும்
சாதாரணம் இந்த காதலில்

குழந்தையும் குமரியும்
குணமொன்றே இந்த காதலில்

கிழவியோ கிள்ளையோ
கிளியோபாட்ரா இந்த காதலில்

இடைவெளியும் இணைதலும்
இல்லாததேது இந்த காதலில்

முத்தமும் முறைப்பும்
முக்கியம் இந்த காதலில்

வெட்கமும் விலகலும்
வேண்டும் இந்த காதலில்

தொடுதலும் தொல்லையும்
தொந்தரவில்லை இந்த காதலில்

அடித்தலும் அணைத்தலும்
அஹிம்சை தான் இந்த காதலில்

ஆச்சாரமும் அபச்சாரமும்
அர்த்தமில்லை இந்த காதலில்

அச்சமும் அடமும்
அழகுதான் இந்த காதலில்

பிரிதலும் புரிதலும்
புதுமையில்லை இந்த காதலில்

பணமும் பரதேசியும்
பேதமில்லை இந்த காதலில்

கொஞ்சலும் கெஞ்சலும்
கொசுறு தான் இந்த காதலில்

கல்யாணமோ கல்லறையோ
காதல் தான் இந்த காதலில்

Saturday 10 March 2012

பெண்ணே என் பெண்ணே

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
சிரிச்சுகிட்டே பொறந்திட்டா
தரணி ஆள வந்துட்டா
மலடி என்ற என் பெயர
மாத்திடவே வந்துட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
பள்ளிகூடம் போனவ தான்
ஃபஸ்ட் மார்க்கும் வாங்கிப்புட்டா
வாத்தியாரும் புகழும் வண்ணம்
நல்ல பண்போட வளந்துட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
படிப்பு மட்டும் போததுன்னு
கலைகளையும் கத்துக்கிட்டா
ஆத்தே எம்மவலா??னு
ஆச்சர்யத்த குடுத்துப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
வயசுக்கு வந்தவ தான்
வறம்போட நடந்துக்கிட்டா
நா சொல்லி ஏதும் கொடுக்கலியே??
நாகரிகம் தெரிச்சுக்கிட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
பட்ட படிப்பு படிச்சு வந்தா
கை தொழிலும் தெரிச்சு வந்தா
தான் வளந்த ஊருக்கே
தாசில்தாரா மாறி வந்தா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
அடக்கத்தோட வளத்த பொண்ணு
ஆள எப்போ கத்துகிட்டா?
ஆத்தாடி எம்மவ தான்
எங்கிராமத்த உசத்திப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
அடுப்படிக்குள் நொலஞ்சவதான்
அத்தனையும் சமச்சுப்புட்டா
மீன் கொழம்பு மணக்கயில
ஏ ஆத்தாவ மிச்சிப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
வாக்கப்பட்டு போனவதான்
பதவிசா நடந்துகிட்டா
என் மருமக தான் உசத்தியின்னு
மாமியார சொல்ல வச்சுப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
பொன்மகளே பொற்கொடியே
நா பெத்தெடுத்த பெண்புலியே
வையகமும் வாழ்த்தவேணும்
பல்லாண்டு வாழவேணும்

Saturday 3 March 2012

முதல் காதல்

முதல் முதலாய் பார்த்ததுமே
உலகம் முழுக்க மறந்ததென்ன?
கண்கள் நான்கின் தீண்டலிலே
காதல் குழந்தை பிறந்ததென்ன?

இரண்டாம் முறையாய் பார்த்தபோது 
விரல் கொடுக்க துணிந்ததென்ன?
இது தானோ காதல் என்று
நொடி பொழுதில் புரிந்ததென்ன?

அப்படி என்னதான் பேசுவீர்கள்? - என்று
தோழியை கேலி செய்ததென்ன? -இன்று
காலம் என்பதை மறந்துவிட்டு
காரணம் இல்லாமல் பேசுவதென்ன?

பாறை போல இருந்த இதயம்
சோழி போல சுழல்வதென்ன?
இறகு போல திரிந்த மனது
சிறைக்குள்ளே அடைந்ததென்ன?

முத்தம் என்றால் சத்தம் என்று
இதுவரை நானும் நினைத்ததென்ன?
மூச்சு காற்றின் ஓசை கூட
மெல்லிசையாய் ஒலிப்பதென்ன?

காதல் வந்தால் இப்படித்தானோ
எனக்குள் நானே சிரிப்பதென்ன?
தாலி கட்டும் நேரம் நினைத்தால்
தரிசு நிலமும் விளைவதென்ன? 

காதல் ஒருத்தி கை பிடித்தேன்
கண்களுக்குள் விழுந்து விட்டேன்
காலம்முழுக்க அவளுடன் தான் - என்று
கையெழுத்தும் போட்டு விட்டேன்

பிள்ளை என்னை கிள்ளிவிட்டால்
தொட்டிலயும் ஆட்டிவிட்டால்
என்னடி இது தொல்லை என்றால்
கண்களாலே சண்டயிட்டால்

முத்தெடுக்க துணிந்துவிட்டேன்
சிரிப்பலைக்குள் விழுந்துவிட்டேன்
முழ்கிவிட வேண்டும் என்று
கடவுளிடம் மண்டியிட்டேன்

கவிதை புத்தகம் வாங்கி வந்தேன்
முதன்முதலாய் பரிசு தந்தேன்
கொடுத்த பின் தான் தெரிந்ததடி
கவிதைக்கு பரிசாய் கவிதை என்று

காந்த விழியின் நீளம் கண்டால்
கடலும் கூட சிறியதடி
கள்ள பார்வை பட்டு பட்டே
இதயம் கிள்ளை மொழி பேசுதடி

Tuesday 21 February 2012

மின்தடை

கவிதை எழுத
காகிதத்தை எடுத்தேன்
கரண்ட் கட் ஆனது
2 மணி நேர மின்தடைக்கே
பட்டணத்தில் படாத பாடு என்றால்
என் பாமரனுக்கோ
8 மணி நேர மின்தடை

அறிக்கையில் சொன்னதுபோல்
அனைத்தும் இலவசம்
மின்விசிறி,மிக்சி,கிரைண்டர்- ஆனால்
மின்சாரம் மட்டும் கிடையாது (நாங்களும் யோசிப்போம்ல!!)
இலவச மின்சாரம்
எளியவனுக்கு உண்டு (மகனே கரண்ட் இருந்தாதான!!)

காதலர் தினத்தன்று
காதலிக்கு பரிசு
கலர் கலராய் கை விசிறி
இப்போதெல்லாம் காத்தாடி வாங்கினால்
கைக்குட்டை மூன்று இலவசம்

இருட்டில் தான் பேய்கள் வாழும் என்றால்
இருட்டில் வாழ பழகி கொள்ளுங்கள்
மனித பேய்களா!!

Friday 27 January 2012

ஆனந்த பைத்தியம்

அன்னையிடம் மட்டும் 
அனைத்தையும் உரைத்தவள்
உன்னிடம் பேசி 
அன்னையை மறந்ததென்ன?

உறங்க மறந்து
உண்ண மறுத்து
உரக்க சிரித்து
உள்ளம் தொலைத்தேன்

உன் பேரை கேட்டாலே
உதடு சிரித்தது
ஏன் எனக் கேட்டால்?
அசடு வழிந்தது

இரு பன்னிரெண்டு வருடங்கள்
எதையுமே உணராமல்
ஓரிரு நாட்களில் 
எனக்குள் நிகழ்ந்ததென்ன??

இதயம் சிரித்தது
உண்மையை உரைத்தது
ஆனந்த பைத்தியம்
உனக்கென்று சொன்னது!!

Wednesday 11 January 2012

கிறுக்குச்சிறுக்கி


ஆத்தோரம் தோப்புக்குள்ள
ஆளில்லா நேரத்தில
என்னை என்ன செய்வாயோ
எண்ணி எண்ணி சிலிர்த்துக்கிட்டேன்
எனக்குள்ள சிரிச்சுகிட்டேன்

கிறுக்குத் தான் பிடிச்சிருச்சோ?
ஆத்தா என்ன வையக்கேட்டேன்
அய்யனத்தான் கண்டுப்புட்டா
அடுக்களைக்குள் ஒளிஞ்சுக்கிட்டேன்

கறிசோறு சமைச்சிடத்தான்
கருத்தோட கத்துக்கிட்டேன்- உன்
தோளோடு சாஞ்சிடத்தான்
என்ன தவம் செஞ்சுப்புட்டேன்

உள்ளூரில் நீயிருந்தும்
ஒருமுறை வந்து பார்க்கலயே
கல்யாணத் தேதிக் குறிச்சதாரோ? - அதை
காலந் தள்ளி வச்சதாரோ?

மலைக்கோயில் தேடிப்போனேன்
மனசார வேண்டப்போனேன்
சாமி முகம் மறைஞ்சதய்யா - உன்
ஆசை முகம் தெரிஞ்சதய்யா!!

தூரத்தில் உன்ன பார்த்தாலே
தூரல் விழும் நெஞ்சுக்குள்ள
பக்கத்தில வருவாயோ
ஏங்குது இந்த சின்னப்புள்ள!!

Sunday 8 January 2012

அய்யோ!!

அழுதழுது நான் சாகத்தானா?
அக்னி சாட்சியாய் என் கைப்பிடித்தாய்
நொந்து நொந்து உடல் வேகத்தானா?
நொடிப்பொழுதும் விலகாமல் என்னுள் இருந்தாய்


பத்துப் பொருத்தம் பார்த்து 
மணமேடை ஏறியவன்
அதில் ஒன்று கூட நிலைக்காமல்
மண்ணுக்குள் மறைந்ததென்ன?


ஆரஞ்சு பட்டு வேண்டாம் என்று
அரக்கு பட்டுப்புடவை எடுத்தாய் - இப்படி
வெள்ளை உடை உடுத்தத்தானா
விதவிதமாய் என்னை அலங்கரித்தாய்


மெட்டி ஒலி சத்தம் கேட்டே
மெல்ல நெருங்கி வந்தவனே - இன்று
என் அழுகுரலும் கேட்கலயோ?
ஆறுதல் சொல்ல நீயில்லயோ?


மல்லிகைப்பூ வாங்கி வைத்தேன்
மாலையில் நீயும் மயங்கிடத்தான் - இன்று
பூவோடு பொட்டும் போனதடா
புன்னகை முகமும் தீர்ந்ததடா


இப்படி நட்டாத்தில் விடத்தானா
நங்கை என்னை காதலித்தாய்
விதியை எண்ணி அழத்தானா
வீம்பாய் என் கைபிடித்தாய்


மங்கள நேரம் பார்த்துத்தானே
மாங்கல்யம் கயிறுதனைக் கட்டினாய்
அதை உன்னோடு அறுத்துச்செல்ல
எப்போதடா எமனிடம் நேரம் கேட்டாய்?


வாழ்ந்த வாழ்வும் சலிச்சிட்டுதோ
தெற்கு வாசல் தேடிப்போனாய்
திரும்பி எழா நித்திரை ஒன்றை
என்னை விட்டு தனித்து போனாய்


அட சண்டாள கடவுளே!!
அவன் இறக்க நேரம் குறித்தவன்
அவனை மறக்க நேரம் குறிக்க மறந்தாயோ?


உன்னோடு செத்திடவே
உடன்கட்டை ஏறிடுவேன் - ஆனால்
கண்ணெதிரில் சிரிக்குதடா
நம் காதலுக்கு சாட்சியொன்று

Tuesday 3 January 2012

என் நண்பன்!!

பெண்ணொடு நட்புற்றால்
பெருநஷ்டம் வருமென்று
பெரும்பாலோர் ஒதுங்கி நிற்க
வெறும் நட்போடு வந்தவனே!!

காசில்லா நேரத்திலே
கல்வி எதற்கு பெண்ணுக்கென்று
வீட்டில் எல்லாரும் சொன்னாலும்
பகுத்தறிவு அவர்கூட்டி
காந்தி படம் போட்ட காகிதத்தால்
வாழ்நாள் வெளிச்சம் தந்த பகலவனே!!

காதல் உண்டோ இருவருக்கும்? - என்று
நம் பெற்றொரே கேட்ட பின்பும்
கண்ணியமாய் நட்பைச் சொல்லி
அவர் கருத்துதனை மாற்றிட்டாய்!!

சகோதரனோ நீயென்று
நண்பர் கூட்டம் கேட்டபோதும்
இல்லையென்று மறுத்திட்டாய்
அதற்கும் மேல் நட்பென்று உணர்த்திட்டாய்!!

கன்னியின் என் காதலினை
கண்ணாளன் அறியுமுன்னே - என்
கள்ளச்சிரிப்பில் கண்டுகொண்டாய் - என்வாயால்
காதலையும் சொல்லவைத்தாய்!!

அவனை பற்றி தெரிந்து கொள்ள -அவன்
நண்பன் பற்றி கேட்கச்சொன்னாய்
உன் நண்பனாக அவன் இருந்ததினால்
என் காதலனாய் ஆகிவிட்டான்!!

உன்னை போலொரு காதலியை
எப்படியடா தேர்ந்தெடுத்தாய்?
உன் காதலுக்கு சம்மத்தத்தை
என்னிடம் வந்து சொல்லுகின்றாள்!!

கேனச்சிறுக்கி நானென்று
கெட்ட வார்த்தை சொன்னதுண்டு
அதில் பெண்ணடிமை தெரியவில்லை
உன் பேரன்பு தெரிந்ததடா!!

தொலைபேசியில் மணிக்கணக்காய்
பேசினால்தான் நட்பென்றால்
கர்ணன் எதைக்கொண்டு வளர்த்திட்டான்?
நட்பென்னும் நன்றிக்கடனை!!

தோளோடு தோள் உரசி
நின்றால் தான் நட்பாமோ?
அழுதபோது உன் கைக்குட்டை
தண்டனையின்போது உன் செருப்பு
பாராட்டும் போது கைக்குலுக்கல்
இது தவிர வேறு தெரியாது
நம் நட்புக்கு!!

அடுத்துவரும் ஜென்மத்தில்
ஒரு கருவறையில் இரட்டையாய் நாம் பிறப்போமா?
அங்கிருந்தே நட்பாவோம்
நட்பு தீயில் மகர தீபம் ஏற்றிவைப்போம்!!