Sunday 5 August 2012

எந்த பக்கம் திரும்பினாலும், அந்த பக்கம் நீ இருக்க

எந்த பக்கம் திரும்பினாலும்
அந்த பக்கம் நீ இருக்க

காலையில எழுந்திரிச்சு
மொகத்த நானும் கழுவிக்கிட்டு
கண்ணாடியில பாத்தாக்கா
கண்ணுக்குள்ள நீ இருக்க

வெட்கங் கெட்ட சிறுக்கிக்கு
விடிஞ்சதின்னும் தெரியலியோ
மத்தியானம் ஆயிருச்சு
மச்சான் நெனப்பின்னும் போகலயோ??

கருவாட்ட திங்கும் போது
உப்பு கரிக்கயில நீ இருக்க
புளிதண்ணி வச்சாலும் - தொட்டுகிட
கானத் தொவயலாவும் நீ இருக்க

அந்தியும் தான் மசங்கிருச்சு
ஆதவனும் மறச்சிருச்சு
அத்தானு கூப்பிடத்தான்
ஆசையும் தான் வந்திருச்சு

கண்ண நானும் தொடச்சிக்கிட்டு
கவிதை எழுத நெனச்சாக்கா
வார்த்தைக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு
கவிதையாத்தான் நீ இருக்க

மொழு மொழுனு எண்ண வச்சு
மொட்டு போல பின்னல் போட்டு
மண மணக்க மல்லி வச்சு
மச்சான தேடிக்கிட்டு வாசல் வர வந்தாச்சு

காட்டுக்கு போனவுக
காலடிச்சத்தம் கேட்டுடுச்சு
இந்தாரு வெள்ள நிலா
கண்ண நீயும் மூடிக்கடே!!