Saturday 10 March 2012

பெண்ணே என் பெண்ணே

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
சிரிச்சுகிட்டே பொறந்திட்டா
தரணி ஆள வந்துட்டா
மலடி என்ற என் பெயர
மாத்திடவே வந்துட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
பள்ளிகூடம் போனவ தான்
ஃபஸ்ட் மார்க்கும் வாங்கிப்புட்டா
வாத்தியாரும் புகழும் வண்ணம்
நல்ல பண்போட வளந்துட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
படிப்பு மட்டும் போததுன்னு
கலைகளையும் கத்துக்கிட்டா
ஆத்தே எம்மவலா??னு
ஆச்சர்யத்த குடுத்துப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
வயசுக்கு வந்தவ தான்
வறம்போட நடந்துக்கிட்டா
நா சொல்லி ஏதும் கொடுக்கலியே??
நாகரிகம் தெரிச்சுக்கிட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
பட்ட படிப்பு படிச்சு வந்தா
கை தொழிலும் தெரிச்சு வந்தா
தான் வளந்த ஊருக்கே
தாசில்தாரா மாறி வந்தா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
அடக்கத்தோட வளத்த பொண்ணு
ஆள எப்போ கத்துகிட்டா?
ஆத்தாடி எம்மவ தான்
எங்கிராமத்த உசத்திப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
அடுப்படிக்குள் நொலஞ்சவதான்
அத்தனையும் சமச்சுப்புட்டா
மீன் கொழம்பு மணக்கயில
ஏ ஆத்தாவ மிச்சிப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
வாக்கப்பட்டு போனவதான்
பதவிசா நடந்துகிட்டா
என் மருமக தான் உசத்தியின்னு
மாமியார சொல்ல வச்சுப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
பொன்மகளே பொற்கொடியே
நா பெத்தெடுத்த பெண்புலியே
வையகமும் வாழ்த்தவேணும்
பல்லாண்டு வாழவேணும்

Saturday 3 March 2012

முதல் காதல்

முதல் முதலாய் பார்த்ததுமே
உலகம் முழுக்க மறந்ததென்ன?
கண்கள் நான்கின் தீண்டலிலே
காதல் குழந்தை பிறந்ததென்ன?

இரண்டாம் முறையாய் பார்த்தபோது 
விரல் கொடுக்க துணிந்ததென்ன?
இது தானோ காதல் என்று
நொடி பொழுதில் புரிந்ததென்ன?

அப்படி என்னதான் பேசுவீர்கள்? - என்று
தோழியை கேலி செய்ததென்ன? -இன்று
காலம் என்பதை மறந்துவிட்டு
காரணம் இல்லாமல் பேசுவதென்ன?

பாறை போல இருந்த இதயம்
சோழி போல சுழல்வதென்ன?
இறகு போல திரிந்த மனது
சிறைக்குள்ளே அடைந்ததென்ன?

முத்தம் என்றால் சத்தம் என்று
இதுவரை நானும் நினைத்ததென்ன?
மூச்சு காற்றின் ஓசை கூட
மெல்லிசையாய் ஒலிப்பதென்ன?

காதல் வந்தால் இப்படித்தானோ
எனக்குள் நானே சிரிப்பதென்ன?
தாலி கட்டும் நேரம் நினைத்தால்
தரிசு நிலமும் விளைவதென்ன? 

காதல் ஒருத்தி கை பிடித்தேன்
கண்களுக்குள் விழுந்து விட்டேன்
காலம்முழுக்க அவளுடன் தான் - என்று
கையெழுத்தும் போட்டு விட்டேன்

பிள்ளை என்னை கிள்ளிவிட்டால்
தொட்டிலயும் ஆட்டிவிட்டால்
என்னடி இது தொல்லை என்றால்
கண்களாலே சண்டயிட்டால்

முத்தெடுக்க துணிந்துவிட்டேன்
சிரிப்பலைக்குள் விழுந்துவிட்டேன்
முழ்கிவிட வேண்டும் என்று
கடவுளிடம் மண்டியிட்டேன்

கவிதை புத்தகம் வாங்கி வந்தேன்
முதன்முதலாய் பரிசு தந்தேன்
கொடுத்த பின் தான் தெரிந்ததடி
கவிதைக்கு பரிசாய் கவிதை என்று

காந்த விழியின் நீளம் கண்டால்
கடலும் கூட சிறியதடி
கள்ள பார்வை பட்டு பட்டே
இதயம் கிள்ளை மொழி பேசுதடி